அந்துப்பூச்சிகளுடன் ஒரு இரவு
அன்று ஜனவரி 13, 2024. என்னுடைய களப்பணியை முடித்துவிட்டு நான் ஆர்டா் செய்த மூக்கு கண்ணாடியை வாங்குவதற்காக அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்திற்கு சென்றிருந்தேன் (ACCC). நான் ஆய்வகத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த போது தளவாய்பாண்டி அண்ணன் வந்தார், அவர் சமீபத்தில் ஆரோவில் (Auroville) சென்று நிகழ்த்திய அந்துப்பூச்சிகள் குறித்த உரையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவா் அந்துப்பூச்சிகளின் பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பங்கு போன்றவற்றை விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு, தான் எழுதி வெளியிட்ட “தமிழ்நாட்டின் பொதுவான அந்துப்பூச்சிகள்” என்ற குறுங்கையேடை என்னிடம் காட்டினார். எனக்கும் ஒன்றை கொடுக்க முடியுமா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் ஒன்றை எனக்கு கொடுத்தார். இக்கையேட்டில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 162 பொதுவான அந்துப்பூச்சிகளின் படங்கள் மற்றும் பெயர்கள் கொண்ட அழகான சிறு புத்தகம் அது.
ஒவ்வொரு மாதமும், ACCC-ன்
வளாகத்தில் இவா் அந்துப்பூச்சிகளை உற்றுநோக்குவது வழக்கம். அவா் அமைத்திருக்கும்
அந்துப்பூச்சி திரையில் வரும் அந்துப்பூச்சிகளை பதிவு செய்வார். இந்த மாதம் அதில்
கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரையில் வரக்கூடிய அந்துப்பூச்சிகளை அடையாளம் காண இந்த குறுங்கையேடை பயன்படுத்த நான் காத்திருந்தேன்.
நாங்கள் சுமார் 18:30 மணிக்கு அந்துப்பூச்சி திரையை அமைத்து விளக்கை
ஆன் செய்தோம். அந்துப்பூச்சிகள் திரைக்கு வர ஒரு மணி நேரம் ஆனது. ஆனால் அந்துப்பூச்சிகளை
விட, மற்ற பூச்சிகளான வண்டுகள், விட்டில் பூச்சிகள் மற்றும் ஈக்கள்
போன்றவைகள் திரையில் பரவிக் காணப்பட்டன. திரையில் முதல் அந்துப்பூச்சியைப்
பார்த்தேன். முதல் பார்வையில், அது கிராம்பிடே
(Crambidae) குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை அடையாளம் கண்டுக் கொண்டேன். அந்துப்பூச்சியின் அடிவயிறு அதன் இறக்கைகளை விட நீளமாக இருக்கும் அதுவே இக்குடும்பத்தின் சிறப்பியல்பு என்பதை அவா் எனக்குக் கற்றுக்
கொடுத்ததை நினைவு கூர்ந்தேன். மேலும் சில அந்துப்பூச்சியை
புகைப்படம் எடுத்து குறுங்கையேடு
உதவியுடன் அடையாளம் கண்டு கொண்டேன்.
Elophila scitalis |
சரியான இனத்தை யூகிக்க எனக்கு சில முயற்சிகள் தேவைப்பட்டன. அப்போது திரையில் இருந்த அந்துப்பூச்சி Elophila scitalis அல்லது சாக்லேட்-பழுப்பு அந்துப்பூச்சி என்பதை கண்டறிந்தேன். பின்பு அதனை என்னுடைய களப் புத்தகத்தில் பதிவு செய்தேன். பின்னர், அவர் என்னை திரையின் மறுபக்கத்திற்கு அழைத்து சென்று, வேறு சில அந்துப்பூச்சியைக் காட்டி, குறுங்கையேடை பயன்படுத்தி அடையாளம் காணச் சொன்னார். இது Elophilia-விட சற்று பெரிய அந்துப்பூச்சியாக இருந்தது. மேலும் அது மிகவும் வண்ணமயமானதாக இருந்தது, இறக்கைகளில் உள்ள கோடானது நரம்புகள் போன்று இருந்தது. மேலும், இரண்டு வெண்ணிறப் புள்ளிகள் இறக்கையின் மேல்புறம் பெற்றிருந்தது. கீழ் இறக்கைகள் மற்றும் தலை ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. இது Erebidae குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான அந்துப்பூச்சிகள் இக்குடும்பத்தில் தான் காணப்படுகிறது என்பதை கூறினார். குறுங்கையேடை பயன்படுத்தி அது Orange-underwing snout tiger அல்லது Asota caricae என்று அடையாளம் கண்டேன்.
Indian wolf snake; Lycodon aulicus |
சிறிது
நேரம் கழித்து, நாங்கள் அந்துப்பூச்சிகளையும் பிற உயிரினங்களையும் பார்க்க வளாகத்தைச்
சுற்றிச் சென்றோம். உணவுக்காக ஒரு பல்லியைப் பிடிக்க மறைந்திருந்த வெள்ளிக்கோல் வரையன் (Indian wolf snake; Lycodon
aulicus) பாம்பை பார்த்தோம். புல்லில் சில தவளைகள் மற்றும் எண்ணற்ற
அந்துப்பூச்சிகளையும் பார்த்தோம். சில
நேரம் கழித்து நாங்கள் அந்துப்பூச்சித்
திரைக்குச் சென்று
பார்த்த போது Acacia blood
vein (Traminda mundissima), Private
hawkmoth (Psillogramma vates), Olepa ricini போன்ற அந்துப்பூச்சிகளை கண்டோம். மேலும் இக்குறுங்கையேடு நம்மைச் சுற்றி காணப்படும் அந்துப்பூச்சிகள் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் அடையாளம் காண எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
கட்டுரையாளர்
இரா. சங்கரநாராயணன்
ATREE
1 Comments
சிறப்பான பகிர்தல். நாங்கள் களத்தில் உடன் இருந்து கண்டது போல, அருமையான எழுத்து. நன்றி.
ReplyDelete