நான் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒரு உத்தியை கையாள்கிறது என்று கூறியிருந்தேன். அதற்கு உதாரணமாக பல்வேறு உயிரினங்களை நாம் கூறலாம். குறிப்பாக Erebidae குடும்பத்தை சாா்ந்த அந்துப்பூச்சிகள் மிகவும் சாதுர்யமாக செயல்படுகிறது. இவையானது தன்னுடைய முட்டை, கம்பளிப்புழு, கூட்டுப்புழு நிலை மற்றும் முதிர்ந்த அந்துப்பூச்சி நிலை என இந்த நான்கு  நிலையிலும் வேறுபட்ட உத்திகளை கையாள்கிறது.  முட்டையானது வாழிடச்சூழலுக்கு ஏற்றவாறு இலைகளிலும், பாறைகளிலும் மேலும் வேறுபட்ட நிறத்திலும் முட்டைகளை இடுகின்றன. முதிர்ந்த அந்துப்பூச்சி தன்னுடைய அடிவயிற்றில் உள்ள உரோமங்களை வைத்து முட்டைகளை மூடி சிலந்திகள், எறும்புகள், குழவிகள் போன்றவைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன. 

தன்னுடைய உரோமங்கள் மற்றும் உமிழ்நீரை பயன்படுத்தி கவசஉறையை உருவாக்கி அதனுள் கூட்டுப்புழு நிலையை அடைகிறது (Orvasca subnotata). 

கம்பளிப்புழு நிலையில் தன்னுடைய உடம்பில் காணப்படும் உரோமங்கள் மூலமும் மேலும் சில தற்காப்பு நடவடிக்கைகள் மூலமும் தங்களை காத்துக் கொள்கின்றன. மரத்தில் இருந்து கீழே கம்பளிப்புழு நூல் போன்ற (சிலந்தி வலை போன்ற) ஒன்றில் தொங்குவதை பெரும்பானவா்கள் பார்த்திருப்போம், அது ஒரு தற்காப்பு நடவடிக்கை ஏதாவது ஒரு பறவையோ மற்ற ஏதோ ஒரு உயிரினமோ தாக்க வரும்போது தன்னுடைய உமிழ்நீரை பயன்படுத்தி இதை செய்கிறது, பின்பு சிறிது நேரம் கழித்து திரும்பவும மேலே செல்கிறது.   

பொிய கண் போன்ற அமைப்பை இறக்கையில் கொண்டுள்ள
Erebus macrops

இந்த அந்துப்பூச்சி என்னப்பா பார்க்கவே பயங்கரமா இருக்கு. இது தன்னை ஒரு பெரிய உயிரினம் போன்ற தோற்றத்தை எதிரிகளிடம் தோற்றுவித்து தங்களை காத்துக் கொள்கிறது, இவைகள் திடீரென்று தங்களுடைய தோற்றத்தையும் மற்றும் குறியீடுகளையும் மாற்றுவது இல்லை. இவைகள் பாிணாம வளா்ச்சியில் தன்னுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களை அவைகள் பாிணமித்து கொண்டுள்ளன. 

தொந்தரவு செய்யப்படும் போது பிரகாசமான பின்னிறக்கையை விரித்து காட்டுகிறது. Eudocima homaena (Pomegranate fruit piercer)

ஒருசில அந்துப்பூச்சிகள் பிரகாசமான நிறத்தை பெற்று தங்களை காத்துக் கொள்கின்றன. 

மேலும் தகவலுக்கு

சு. தளவாய் பாண்டி, 

ஆராய்ச்சியாளா் (அந்துப்பூச்சி ஆர்வலா்)

ஏட்ரியின் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு.

Email: thalavaipandi@atree.org