மொசுக்கட்டைப் பூச்சியில் (கம்பளிப்புழு) இவ்வளவு வகை இருக்கா?
மாறுபட்ட தோற்றம் கொண்ட அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு |
செதிலிறகிகள் அதாவது வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப்பூச்சியின் கம்பளிப்புழுக்களை மொசுக்கட்டை என்று அழைக்கிறார்கள் இவைகள் ஒவ்வொரு இடத்திலும் பெயா்கள் வேறுபட்டு இருக்கும். நம்மில் பெரும்பாலனவா்களுக்கு எந்த கம்பளிப்புழுக்களை கண்டாலும் அது அரிக்கும் தன்மையுடையது தொட்டால் ஊறல் வந்து விடும் என்ற எண்ணம் உண்டு. உண்மையில் கூறினால் நம்மை சுற்றி ஏராளமான பல்வேறு வகைகளை அதாவது பல்வேறு குடும்பங்களை சார்ந்த கம்பளிப்புழுக்கள் காணப்படுகின்றன அவைகள் அனைத்தும் அரிக்கும் தன்மையுடையவை அல்ல. பொதுவாக அரிக்கும் தன்மை கம்பளிப்புழுவின் மேல் காணப்படும் உரோமங்களினால் ஏற்படுகிறது ஆனால் உரோமங்கள் இல்லாமல் வழுவழுப்பாக காணப்படும் கம்பளிப்புழுக்களால் அரிப்பு ஏற்படாது. கம்பளிப்புழுக்களின் மேல் காணப்படும் உரோமங்கள் மனிதா்களுக்கு அரிப்பு ஏற்படுத்துவதற்காக இல்லை, தங்களுடைய எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கும் மேலும் கவசஉறையை அமைத்து அதனுள் கூட்டுப்புழு நிலையை அடைந்து முதிர்ந்த அந்துப்பூச்சி (அ) வண்ணத்துப்பூச்சி வெளிவருவதற்கும் உதவுகின்றது.
தன்னுடைய உடம்பில் காணப்படும் உரோமங்களை வைத்து கவசஉறையை உருவாக்கி அதனுள் கூட்டுப்புழு நிலையை அடைந்திருக்கும் அந்துப்பூச்சி |
இது தொியாமல் நம்மில் பெரும்பாலனவா்கள் இந்த கம்பளிப்புழுக்களை கொன்று விடுகின்றனா்.
உரோமங்கள் இல்லாமல் காணப்படும் அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு |
நம்மை சுற்றி ஏராளமான அந்துப்பூச்சிகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன ஆனால் அவைகளின் இளநிலைகள் குறித்த தரவுகள் மிகவும் குறைவு ஆகையால் நீங்கள் ஏதாவது கம்பளிப்புழுவை கண்டால் அதனை உற்றுநோக்குங்கள் உடனே எடுத்து விடாதீர்கள், அவைகள் எதனை உண்கிறது என்பதை தொிந்தவுடன் அதனை ஒரு பெட்டியில் (அ) பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து அவைகள் உண்ண உண்ண உணவு அளித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவைகளின் மாற்றங்களை கண்டு ரசித்து முதிர்ந்த பூச்சியை இந்த உலகில் பறக்கவிடுங்கள்.
உரோமங்களுடன் காணப்படும் அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு |
நீங்கள் கண்டு ரசித்த மேலும் வளா்த்த கம்பளிப்புழுக்களின் தகவல்களை iNaturalist, Indian Biodiversity Portal, Moths of India, Butterflies of India போன்ற தளங்களில் பகிர்ந்தால் இவைகள் வருங்கால செதிலிறகிகளின் வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
மேலும் தகவலுக்கு
சு. தளவாய் பாண்டி,
ஆராய்ச்சியாளா் (அந்துப்பூச்சி ஆர்வலா்)
ஏட்ரியின் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு.
Email: thalavaipandi@atree.org
0 Comments