என்னப்பா டப்பால வச்சிருந்த கம்பளிப்புழுவை காணோம் ?


ஜனவாி மாதம் 2022, காலையில் தண்ணீர் அருந்துவதற்காக என்னுடைய அறையிலிருந்து பக்கத்துக்கு அறைக்கு செல்லும் போது பாதையில் அதாவது படிக்கட்டில் ஒரு பொிய பச்சைநிற அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு அதை கையில் எடுத்து பார்த்தால் அது Hawk Moth (Sphingidae) குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு என்று தொிய வந்தது, இதை எவ்வாறு கூறினேன் என்றால் இந்த குடும்பத்தை சார்ந்த கம்பளிப்புழுவின் பின்புறத்தில் நீண்ட ஊசியான வால் போன்ற அமைப்பை பெற்றிருக்கும். இது பார்ப்பதற்கு சற்று பொியதாக இருந்தது ஆகையால் இது இந்த கம்பளிப்புழுவின் கடைசி நிலை என்பதை உறுதி செய்து விட்டு பின்பு ஒரு டப்பாவில் கால் அளவு மண் எடுத்து பின்பு அந்த கம்பளிப்புழுவை அதன் மேல் விட்டு விட்டேன். மறுநாள் காலையில் பார்த்தால் கம்பளிப்புழுவை காணவில்லை. ஏனென்றால் இவைகள் மண்ணை தன்னுடைய உமிழ்நீரை வைத்து கூடாரம் போன்ற கவசஉறையை உருவாக்கி அதனுள் கூட்டுப்புழு நிலையை அடையும் என்பதை நான் படித்திருக்கிறேன்.


கம்பளிப்புழு பின்புறத்தில் வால் போன்ற அமைப்பு

ஆனால் நோில் பார்த்தது இல்லை ஆகவே அதனை உறுதிப்படுத்துவதற்காக டப்பாவில் வைத்திருந்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி பார்த்தால் சிறிய கூடாரம் போன்ற அமைப்பு அதனை தூக்கி பார்த்தால் உள்ளே கூட்டுப்புழு. சில நாள்கள் கழிந்தது என்ன வகை அந்துப்பூச்சி வெளியே வரும் என்கின்ற ஆர்வம் என்னுள்ளே மேலோங்கியது இறுதியில் Psilogramma vates (Butler, 1875) என்ற அழகிய அந்துப்பூச்சி வெளிவந்தது. இக்குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சியின் உறிஞ்சுகுழலானது மிகவும் நீளமானது இதனை இவற்றின் கூட்டுப்புழு நிலையில் தனித்து தனியாக தொியும்.


உறிஞ்சுக்குழல் பகுதி தனியாக தொியும் கூட்டுப்புழு


உதாரணமாக  ப்ளோரிடா மாகாணத்தில் காணப்படும் ஒரு வகை ஆர்கிட்டின் (Ghost Orchid) மகரந்தச்சோ்க்கையானது இக்குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சிகளால் மட்டுமே நடைபெறும் இந்த வகை அந்துப்பூச்சிகள் இல்லையென்றால் அந்த ஆர்கிட்டில் மகரந்தச்சோ்க்கை தடைபெற்று அந்த ஆர்கிட்டே அழிந்துவிடும். மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் உலகில் மிகவும் வேகமாக பறக்கும் திறன் கொண்டது தட்டான்கள் இவற்றிற்கு அடுத்தபடியாக மிகவும் வேகமாக பறக்கும் திறன் கொண்டவை இக்குடும்பத்தைச் சார்ந்த அந்துப்பூச்சிகள். 

 

வெளிவந்த முதிர்ந்த அந்துப்பூச்சி (Psilogramma vates (Butler, 1875))

இதே போன்று ஒவ்வொரு அந்துப்பூச்சிகளுக்கும் தனிப்பட்ட மற்றும் தனித்துவமான குணங்கள் உள்ளன. ஆகையால் அவற்றின் பயன் தொிந்து அதனை பாதுகாப்போம். 


மேலும் தகவலுக்கு

S.Thalavaipandi

Researcher (Moths enthusiast),

ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar. 

Email: thalavaipandi@atree.org