இது மேல என்ன இவ்வளவு உரோமங்கள் இருக்கு
நான் வளா்த்த கம்பளிப்புழு
கடந்த மாதம், ஒரு சுவாரஸ்யமான அந்துப்பூச்சியின் கம்பளிப்புழுவை பார்த்தோம். அதன் வயிற்றில் கொத்துக் கொத்தாக இருந்த உரோமங்கள் எங்களை உடனே ஈர்த்தது. இந்த கம்பளிப்புழு எரிபிடே (Erebidae) குடும்பத்தில் லிமென்ரினே (Lymantriinae) என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது என தளவாய் பாண்டி சகோதரர் மூலம் தொிய வந்தது.
கம்பளிப்புழு |
மீண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி, மணிமுத்தாறு அருகே இதே போன்ற கம்பளிப்புழு ரிஜாய் மற்றும் நானும் கண்டவுடன் உடனடியாக அதை ஒரு டாப்பாவில் (box) சேகரித்து அதன் வாழ்க்கைச் சுழற்சியைக் கவனிக்க முடிவு செய்தோம். அதன் உடல் பழுப்பு நிறத்தில் இருந்தது மேலும் முற்றிலும் உரோமங்களால் மூடப்பட்டிருந்தது. அதன் சிறிய சிவப்பு தலையின் மேற்புற பக்கவாட்டில் இரண்டு நீண்ட கருப்பு நிற உரோமங்களையும் மற்றும் பின்புறத்தில் கடைசியில் ஒரு கருப்புநிற உரோமங்களையும் கொண்டிருந்தது இதனை செட்டே (Setae) என்று அழைப்பார்கள்.
கம்பளிப்புழுவின் மேற்புறத்தில் காணப்படும் திட்டு போன்ற அமைப்பு |
இவைகள் நம்முடைய மெருதுவான தோல்களில் படும்போது அரிப்பை ஏற்படுத்தும்.இதனை இவற்றின் பாதுகாப்பு உத்தியாக பயன்படுத்துகிறது. அதன் உடலின் மேற்புறத்தில் நான்கு வெண்ணிற உரோம திட்டுகள் (Tussock) இருந்தன ஆகையால் இதனை டஸ்ஸாக் மாத் (Tussock Moth) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இந்த கம்பளிப்புழு எலந்தம் தாவரத்தை (Ziziphus mauritiana) உணவாக உண்கிறது. இரண்டு தோலுரிப்புகளுக்குப் (Molting) பிறகு, நவம்பர் 16 அன்று, கவசஉறையை (Cocoon) கிழித்துக் கொண்டு கூட்டுப்புழுவில் இருந்து ஒரு அழகான அந்துப்பூச்சி வெளிப்பட்டது. அதன் தலை மற்றும் கால்கள் முடிகள் கொண்டிருந்தது, இது "டஸ்ஸாக் அந்துப்பூச்சியின்" குணாம்சமாகும்.
வெளிவந்த முதிர்ந்த அந்துப்பூச்சி |
இந்த குறிப்பிட்ட அந்துப்பூச்சி "Olene mendosa Hübner, 1823 - Brown Tussock Moth" என்று அந்துப்பூச்சியின் களக்கையேடுகளின் உதவியுடன் கண்டறிந்தோம். சமீபத்தில், இதேபோன்ற மற்றொரு டஸ்ஸாக் கம்பளிப்புழுவை நான் சேகரித்தேன். இந்த சிறிய கம்பளிப்புழு வளர்ந்து வருகின்ற ஒவ்வொரு நிலையையும் உற்றுநோக்கி முதிர்ந்த அந்துப்பூச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Written by
R. Kreedika, Research Intern (TamiraSES),
ATREE’s Agasthyamalai Community Conservation Centre, Manimuthar.
Reference more details:
https://entnemdept.ufl.edu/creatures/urban/medical/tussock_moths.htm
https://www.mothsofindia.org/olene-mendosa
Holloway, J. D. 1999. The Moths of Borneo.Part 5. Lymantriidae http://www.mothsofborneo.com/part-5/orgyiini/orgyiini_3_1.php
ICAR-National Bureau of Agricultural Insect Resources. Insect Pests - NBAIR. http://www.nbair.res.in/insectpests/Olene-mendosa.php
0 Comments